சதுரங்க வேட்டை 2 பட சம்பளப் பாக்கியைப் பெற்றுத் தரக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில் அப்படத் தயாரிப்பாளரான நடிகர் மனோபாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் சதுரங்க வேட்டை. நூதன முறையில் மக்களை ஏமாற்றுவது தான் இப்படத்தின் கதை. நடராஜன் நாயகனாக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இப்படத்தின் 2-ம் பாகமான சதுரங்க வேட்டை-2 படம் அரவிந்த்சாமி, திரிஷா நடிப்பில் என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் உருவாகிறது. இப்படத்தை மனோபாலா தயாரிக்கின்றார்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மற்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் நடித்ததற்கான சம்பளத்தை அரவிந்த்சாமிக்கு தயாரிப்பாளர் மனோபாலா தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மனோ பாலா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர், அரவிந்தசாமி தரப்பிடம் பட வெளியீட்டுக்கு தடை கேட்காத பட்சத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அரவிந்த்சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்துசேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மனோபாலா கூறுகையில், அரவிந்தசாமிக்கு 1 கோடி சம்பள பாக்கி இருப்பது உண்மைதான். அவர் டப்பிங் பேசி முடித்தால் பட வெளியிட்டிற்கு முன் கொடுத்து விடுவேன் என்பதற்கு அரவிந்த்சாமி ஒப்புக் கொண்டு தான் நடித்தார். இப்போது, சிலரின் தவறான தூண்டுதலினால் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கான என் தரப்பு விளக்கத்தை கோர்ட்டில் கொடுப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.