நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது காவல்துறையில் புகார்கள் குவிந்ததையடுத்து, தனது கருத்தை வாபஸ் பெற்றுவதாக அறிவித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயபிரகாஷ் ஜெய்லர் பதவியில் இருந்ததாகவும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் தற்போதைய பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லாவுக்கு தொடர்பு இருப்பது போலவும் சமீபத்தில் எச்.ராஜா பேசியிருந்தார்.
இந்த பேச்சு மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்களுக்கு மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் எச் ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் தாஸ். அவர் ஜெய்லர் பதவி வகித்து வந்தார். மாரடைப்பு காரணமாக 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் ஜவாஹிருல்லா பெயரைக் கெடுப்பதற்காக எச்.ராஜா பொய்யான கருத்துக்களை பரப்பி உள்ளார்.
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும், பிற இஸ்லாமியர்களுக்கும் மோதலை ஏற்படுத்த இதுபோல கருத்து பரப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழகம் முழுவதும் எச்.ராஜா மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள்.
இந்நிலையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் எச்.ராஜா. காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, “மதுரையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். ஜெய்லர் ஜெயபிரகாஷை கொலை செய்த அல்-உம்மா இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர் ஜவாஹிருல்லா. அவர் குற்றம் செய்ததாக நான் சொல்லவில்லை.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகுதான் அல்-உம்மா தீவிரவாத அமைப்பு தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தை தடை செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. முந்தைய பேட்டியில் நான் பேசியதில் ஒரேயொரு தவறு தான்.
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையும் காவல் துறையில் இருந்தார். அதனால் தவறுதலாக அவர் பெயரை கூறிவிட்டேன். அது என் தவறு தான். அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உங்க அப்பா வந்தால் கூட என்னை கைது செய்ய முடியாது- ராம்தேவின் ஆணவப் பேச்சு சர்ச்சை