நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் என்று நடிகர் சங்கத்தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நாசர் தலைமையில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், பொருளாளர் கார்த்தி மற்றும் செயலாளர் விஷால் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், சட்டரீதியாகவே நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறுகையில், இந்த செயற்குழு கூட்டத்தில் தேர்தல் பற்றிய ஆலோசனையே முக்கிய விஷயமாக இருந்தது. சட்டரீதியாக நடத்தப்படும் தேர்தலுக்கு, தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார். தேர்தல், தேதியை அவரே அறிவிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாளை முதல் தேர்தல் வேலைகள் நடைபெறும். இதேபோன்று நடிகர் சங்க கட்டிட வேலைகளை முடிக்க கடும் முயற்சிகள் செய்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.