“இளையராஜா 75” நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர் ஒரு தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, ‘இளையராஜா 75’ விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் கடம்பூர் ராஜூ, ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். இந்த சங்கம், இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை வருகிற பிப்ரவரி 2-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியின் முன் ஏற்பாடு பணிகளுக்காக தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சுமார் ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளனர். இந்த நிதி எவ்வாறு திரட்டப்பட்டது என்பது தெரியவில்லை.
மேலும், இந்த நிகழ்ச்சி மூலம் சுமார் ரூ.7 கோடி நிதி திரட்டப்படும் என்று சங்கத்தின் நிர்வாகிகள் தரப்பில் கூறினாலும், அதற்கு உறுதியான திட்டம் அவர்களிடம் இல்லை. தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவி வருகிற ஏப்ரல் மாதம் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால் ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்த பணத்தை டெபாசிட் செய்யாமல், இந்த நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப கூறி விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இந்நிலையில் சென்னையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர்கள் சந்திப்பில், “இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை. இளையராஜா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு யாராலும் பூட்டு போட முடியாது. மார்ச் மூன்றாம் தேதி தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம். அப்போது எல்லா கணக்குகளையும் சமர்ப்பிப்போம்.
இளையராஜா 75 எந்த தடையும் இல்லாமல் நடைபெறும். நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை முறையாக சந்தித்து நிச்சயமாக வெற்றி பெறுவோம். நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளை செய்து வருகிறோம். எந்த தடையும் ஏற்படாது” என்று கூறியுள்ளார்.