கடந்த நவம்பர் இறுதி வாரம் தொடங்கி தொடங்கி நடந்து முடிந்த மத்தியப் பிரதேசம், மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியது.
தெலங்கானாவில் தற்போதை முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் மீண்டும் ராஷ்டிரிய சமேதி கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பாஜக-வை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கூறுகையில், “புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது” எனக் கருத்து பதிவிட்டுள்ளார். பாஜக-வின் ஆட்சிக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த நடிகர் கமல்ஹாசன், திரைப்பட தணிக்கை வாரியம் உட்பட தன்னாட்சி அமைப்புகளுக்கு பாஜக அச்சுறுத்தலாகி வருவதாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் ஐந்து மாநில தேர்தலில் பாஜக-வின் தோல்வியை வரவேற்று கமல் பதிவிட்டுள்ள கருத்து குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை நன்றாக காட்டுகிறது. மேலும் இந்த தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக ரஜினி தெரிவித்தார்.
முன்னதாக, ‘பேட்ட’ பட படப்பிடிப்பு முடிந்த உடன் போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இணைந்து எதிர்க்கும் ஒரே தலைவராக இருக்கும் பிரதமர் மோடி தான் பலம் பொருந்தியவர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஷால் தேர்தல் முடிவுகள் குறித்து பேசும் போது, “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தது தான் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம். மக்களின் மனதில் இருந்த முடிவுகள்தான் தற்போது தேர்தல் முடிவாக வந்துள்ளது” என நேரடியாக பாஜகவை தாக்கி பேசியுள்ளார்.