தெலங்கானாவில் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மின் நிலைய ஊழியர்கள் 9 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் ஸ்ரீசைலம் பகுதியில், நீர்மின் உற்பத்தி ஆலை உள்ளது. இந்த நீர்மின் ஆலையின் உள்ள மின் நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 20) இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாகக் குறிப்பிட்ட மின் நிலையத்திலிருந்த 19 பேர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர் எனத் தகவல் வெளியானது. விபத்து குறித்துத் தகவலறிந்து தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியிலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் சிக்கியிருந்த 10 பேரைப் பத்திரமாக மீட்டனர். எனினும் 9 பேரை மீட்க முடியவில்லை. இதனையடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கத் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இருப்பினும் சிக்கிய 9 பேரும் தீயில் கருகி உயிரிழந்ததாக தெலங்கானா அரசு தெரிவித்தது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்புப் படையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகையில், “தீ ஏற்பட்டவுடன் உள்ளிருந்தவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். இதற்கிடையே தீ பரவாமலிருக்க அனைத்து மின் நிலையங்களும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டன என்றார்.

தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க: சித்தூர் ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுக்கசிவு- 14 பேர் பாதிப்பு; 3 பேர் கவலைக்கிடம்