கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக இருந்து பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பத்தனபுரம். இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பகுதிநேர தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தவள்ளி (வயது 46). பட்டியலின பெண்ணான ஆனந்தவள்ளி பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். இவரது கணவர் பெயிண்டராக உள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஆனந்தவள்ளி, தேர்தலில் வெற்றிபெற்று பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வெற்றி குறித்து ஆனந்தவள்ளி கூறுகையில், “எனது குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். எனது கட்சியால் மட்டுமே இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியும். நான் அதற்கு கடன்பட்டிருக்கிறேன்.
நான் 2011 ஆம் ஆண்டு பகுதி நேர துப்புரவாளராக பணியில் சேர்ந்தேன். ஆனால் இப்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு ரூ.6000 சம்பளம். எனது பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.
தொகுதி பஞ்சாயத்தை ஒரு முன்மாதிரியாக மாற்ற நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். எனது பொறுப்பு இப்போது கணமானது. எனது தொகுதியில் உள்ள அனைவருக்கும் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற நான் கடுமையாக உழைப்பேன்” என்றார்.
[su_image_carousel source=”media: 20926,20927″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு புரட்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 21 வயது மாணவி ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளது தேசிய அளவில் பாராட்டுகளை பெற்றது.
இதைப்போன்று 22 வயதான சட்டக் கல்லூரி மாணவி சாருதி, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒலவண்ண பஞ்சாயத்துத் தலைவராகவும், 21 வயதான ரேஷ்மா மரியம் ஜாய், பத்தனம்திட்டாவில் உள்ள அருவபூலம் பஞ்சாயத்தின் தலைவராகவும், ராதிகா மகாதேவன் (23) பாலக்காட்டில் உள்ள மலம்புழா பஞ்சாயத்தின் தலைவராகவும்,
வயநாடு மாவட்டத்தில் போஜுதான பஞ்சாயத்துத் தலைவராக 23 வயதான அனஸ் ஸ்டெபியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுய உதவிக்குழுவைச் சேர்ந்த இல்லத்தரசி உறுப்பினர்கள் பலரும் உள்ளாட்சித் தேர்தலி வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற 7,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இல்லத்தரசிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் நிலை தலைகீழாக உள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து தரையில் அமர வைப்பதாக விருதுநகர் மாவட்டம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் முத்துலட்சுமி என்பவர் போலிஸில் புகார் அளித்துள்ளார்.
இது முதல்முறை அல்ல, தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இக்கொடுமைகளை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் இளம் மேயர்; திருவனந்தபுரத்தில் 21 வயது மாணவி சாதனை