தூத்துக்குடி மாவட்டம் பக்கம்பட்டியில் நடைபெற்ற இரட்டை கொலையில் தொடர்புடைய நெல்லையை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கொலை வழக்கில் தேடப்பட்ட கண்ணபிரான், குமளி ராஜ்குமார், எஸ்டேட் மணி உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 14 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே பக்கப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி (65). ஐஸ் வியாபாரி. இவரது மனைவி பட்டம்மாள்.
 
இவர்களின் மகன் ராமையா அருகேயுள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி இறந்து விட்டார். மகள்கள் சத்யா, கவிதா. மகன் சுடலைமணி (18).
 
இவர்களில் சத்யா திருமணமாகி அதே ஊரில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் கவிதா, தூத்துக்குடியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள சுடலைமணி, நெல்லையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவார்.
 
வழக்கம்போல் நேற்று பணி முடித்து டவுன் பஸ்சில் ஏறிய சுடலைமணி இரவு 10 மணியை கடந்து விட்டதால் தாத்தா முத்துசாமிக்கு போன் செய்து பக்கப்பட்டி பஸ் ஸ்டாப்பில் வந்து நிற்கும்படி கூறினார்.
 
அதன்படி முத்துசாமியும் அங்கு சென்று காத்திருந்தார். சிறிது நேரத்தில் பஸ்சிலிருந்து சுடலைமணி இறங்கும்போது அங்கு வந்த மர்மக்கும்பல் அவரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது. அவர்களிடம் இருந்து உயிர்பிழைக்க சுடலைமணி தலைதெறிக்க ஓடினார்.
 
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துசாமி, அந்த கும்பலை விரட்டிச் சென்று தடுத்து தனது பேரனை விட்டு விடும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல், முத்துசாமியை சரமாரியாக வெட்டியது. பின்னர் சுடலைமணியையும் ஓட ஓட விரட்டி வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது.
 
இதில் தாத்தா, பேரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இந்நிலையில் இரட்டை கொலையில் தொடர்புடைய நெல்லையை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 24 அரிவாள்கள், 7 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.