துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள், 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் உலகையே உலுக்கி உள்ளது. முக்கியமாக துருக்கி நிலநடுக்கம் அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 5000 பேர் துருக்கியில் இதுவரை பலியாகி உள்ளனர்.
துருக்கி கடந்த 24 மணி நேரமாக எதிர்கொள்ளும் பேரழிவை இதுவரை உலக நாடுகள் எதிர்கொண்டதே இல்லை என்றுதான் கூற வேண்டும். மொத்த துருக்கி நாட்டையும் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் உலுக்கி போட்டுள்ளது.
நேற்று (6.2.2023) காலை முதல் நிலநடுக்கம் 7.8 ரிக்டரில் பதிவாகி இருக்கிறது. துருக்கியில் அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் பலர் மீது வீடுகளின் பாகங்கள் விழுந்துள்ளது. இரண்டாவது நிலநடுக்கம் மாலையில் ஏற்பட்டது.
இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டரில் பதிவாகி உள்ளது. பின்னர் சில மணி நேரங்களில் மூன்றாவது நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவானது. முதல் நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையிலேயே இரண்டாவது நிலநடுக்கம் மற்றும் மூன்றாவது அதே பகுதியில் ஏற்பட்டு உள்ளது.
காஹரமான்மார்ஸ் என்ற நகரத்தில் தான் இந்த நிலநடுக்கம் மோசமாக ஏற்பட்டு உள்ளது. மூன்று நிலநடுக்கமும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில்தான் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் மட்டுமின்றி, அதன்பின் நடக்கும் சிறிய சிறியப் நடுக்கங்களும் இங்கே ஏற்பட்டு இருக்கிறது.
அதாவது ஆப்டர் எபெக்ட் எனப்படும் தாக்கங்களும் இங்கே ஏற்பட்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட 100 கிமீ தூரத்திற்கு பால்ட் லைன் பாதிப்பு இதனால் ஏற்பட்டு உள்ளது. அதாவது 100 கிமீ தூரத்திற்கு தரையில் அடுக்குகள் இரண்டாக பிளந்து நகர்ந்து உள்ளன. பால்ட் லைன் என்பது தரையில் ஒரு 100 கிமீக்கு நேர்கோடு போடுவதை போன்றது.
இந்நிலையில் இன்று (7.2.2023) மீண்டும் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 எனவும், இரண்டாவது முறையாக 5.7 எனவும் பதிவானது. இதனால், மக்கள் மேலும் பீதியில் உறைந்துள்ளனர்.
கட்டிடங்கள், சாலைகள், வீடுகள், விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் என்று எல்லாம் உடைந்து, தனி தனியாக பெயர்ந்து கிடக்கின்றன. வரிசையாக அங்கு அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் துருக்கி நாட்டையே உடைத்து போட்டு இருக்கின்றன.
சிரியாவிற்கு அருகிலுள்ள தொலைதூர பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது. பனிப்பொழிவால் சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களை விரைவாக கொண்டு செல்ல முடியவில்லை.
100 ஆண்டுகளில் இல்லாத அளவில் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 தென்கிழக்கு மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் அதிபர் தாயிப் எர்டோகன். மீட்பு பணிகளை விரைந்து முடிப்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறி உள்ளார்.
துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. சிரியாவில் 1700 பேர் இதுவரை நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 20 ஆயிரம் பேர் காயங்களுடன் துருக்கியில் மீட்கப்பட்டு உள்ளனர். 4000 பேர் சிரியாவில் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். 7 ஆயிரம் கட்டிடங்கள் துருக்கியில் இடிந்து விழுந்து உள்ளன. சிரியாவில் 3 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
துருக்கியில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைத்தவண்ணம் உள்ளது. நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.