மேற்கு வங்கத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும், அமைதியை நிலைநாட்டவும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படம் கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் இப்படத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு கேரளா சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள், முதலமைச்சர் பினராயி விஜயன் வரை பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். மேலும் முஸ்லீம் அமைப்புகள் இந்த படத்துக்கு தடை கோரி போராட்டங்களும் நடத்தினர். இதனால் திரையரங்குகளுக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.
தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட்டால் பிரச்சனை வர வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் முதல் நாள் திரையிடப்பட்ட நிலையில், நேற்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் ஒரு பிரிவினரை அவமதிப்பது போன்று வெளியானது. அதுபோல் தான் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படமும் ஒரு பிரச்சினையை உருவாக்குவது போன்று தெரிகிறது என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.