இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு விவசாய சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் இன்று (08.05.2023) 16-வது நாளை எட்டி உள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பெண்கள் உட்பட பாரதீய கிஷான் யூனியனைச் சேர்ந்தவர்கள் டெல்லிக்குள் வந்தனர்.

அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, திக்ரி எல்லையில் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், காவல்துறையினரின் தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லிக்குள் நுழைந்தனர்.

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணி காரணமாக 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இன்று (08.05.2023) அவர்கள் போராட்டம் நடத்து வரும் ஜந்தர் மந்தர் அருகே காவல்துறை வைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு வீரர்களுடன் போராட்டத்தில் இணைய முயன்றனர். அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து டெல்லி டிசிபி பிரனவ் தயால் கூறுகையில், “விவசாயிகள் குழு ஒன்று பாதுகாப்புடன் ஜந்தர் மந்தர் அழைத்து செல்லப்பட்டனர். நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி அவர்கள் வேகமாக போராட்டம் நடக்கும் இடத்திற்கு நுழைவதில் ஆர்வமாக இருந்தனர்.

அவர்களில் சிலர் கீழே விழுந்து கிடந்த தடுப்புகள் மீது ஏறியும், அவற்றை அகற்றியும் உள்ளே நுழைய முயன்றனர். விவசாயிகள் உள்ளே நுழைவதற்கு வசதியாக காவல்துறையினர் பின்பக்கம் உள்ள தடுப்பினை அகற்றினர்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், ஒன்றிய அரசு மே 21 ஆம் தேதிக்குள் தங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கு விவசாய சங்கங்கள் தங்களின் ஆதரவினைத் தெரிவித்துள்ள நிலையில், விவசாய சங்கத் தலைவர்கள் தவறு செய்ய வேண்டாம், வழக்கின் விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை அமைதி காக்குமாறு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர், பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.