கடந்த 2017 ஆம் ஆண்டில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் திருமுருகன் காந்தி பேசும் போது, பாலஸ்தினத்தில் நடந்த போராட்டம் போல் இங்கும் விரைவில் நடக்கும் என பேசியதாக அவர் மீது ஊபா (UAPA) 13 (1) (b) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை குண்டர் சட்டம், தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து வந்த காவல்துறையினர் தற்போது ஊபா சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த ஊபா (UAPA) சட்டமானது தடா, பொடா சட்டங்கள் போன்ற கருப்புச் சட்டமாகும். இச்சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு விசாரணையே இன்றி சிறை வைக்க முடியும். இது சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களை தடுக்கும் சட்டமாகும். 1967-ல் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தில் ஜாமீன் பெற முடியாது, 7 வருடம் தண்டனை தரக்கூடியதாகும்.
இதை தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டத்தின் (ஊபா) கீழ் திருமுருகன்காந்தி மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் கைது செய்வதற்காக அவரை சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டார்.
ஆனால் இந்த வழக்கு குறித்தான விசாரணை எழும்பூர் மாஜிஸ்திரேட் ஜோஸ்லின்மேரி முன்பு விசாரணைக்கு வந்த போது திருமுருகன் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இந்த சட்டமானது பொருந்தாது எனவும் காவல்துறை பதிவு செய்திருக்கும் தேதி என்பது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருமுருகன் காந்தி சிறையில் இருந்தார்.
2014 முதல் 2018 வரை 4 ஆண்டு காலமாக வெளியில் இருந்து திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்யாமல் தற்போது வழக்கு பதிய என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். மனித உரிமை மீறலாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளூக்காக திருமுருகன் காந்திக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த உபா சட்டத்தின் கீழ் வழக்கை தள்ளூபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அப்போது திருமுருகன்காந்தி, கடந்த ஜூலை மாதம் சிறையில் இருந்த போது நுங்கம்பாக்கம் பகுதியில் ஒரு கூட்டம் நடத்தியதாகவும், அந்தக்கூட்டத்தில் பாலஸ்தீன விடுதலை பற்றி பேசியதாகவும் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறையில் இருக்கும்போது நான் எப்படி கூட்டம் போட்டு பேசி இருக்க முடியும். கடந்த ஜூலை மாதம் ஊபா சட்டத்தின் கீழ் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்திருந்தபோதும் இவ்வளவு நாட்கள் அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?. ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பின்னர் பல இடங்களில் கூட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனரே?, அது எப்படி? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து ஊபா சட்டத்தின் கீழ் திருமுருகன்காந்தியை கைது செய்ய நீதிபதி மறுத்து விட்டார். மேலும், ஊபா சட்டத்தின் கீழ் திருமுருகன்காந்தி மீது பதிவு செய்த எப்.ஐ.ஆரில் உள்ள சந்தேகங்களுக்கு நுங்கம்பாக்கம் போலீசார் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்த நிலையில் இன்றும் இந்த வழக்கில் இதற்கு பதில் அளிக்க முடியாமல் அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் நேரம் கேட்டு காவல்துறையிடம் மூலம் அளித்த பதில் காரணமாக இந்த வழக்கு செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.