பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றிவந்தவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன்.
 
நம்மாழ்வாரின் இளைஞர் குழுவில் பயிற்சிபெற்ற ஜெயராமன், அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கிவந்தார்.
 
நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கும் நெல் ஜெயராமன், ஒவ்வொர் ஆண்டும் திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ம் ஆண்டு முதல் நடத்திவந்தார்.
 
இதற்கிடையே, இரண்டு ஆண்டுகளாகத் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுவந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
அவரை தி.மு.க தலைவர் ஸ்டாலின், சீமான், திருநாவுக்கரசர், வைகோ உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
 
 
திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் சந்தித்தனர். இவர்களில் சிலர், மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளையும் ஏற்பதாக நிதியுதவியும் அளித்துள்ளனர்.
 
இவர்களைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோரும் சந்தித்துப் பேசினர்.
 
இதற்கிடையே, இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி நெல் ஜெயராமன் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
 
12 ஆண்டுகளாக நெல் திருவிழாவை நடத்திவந்த தேசிய விருது, மாநில விருது எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 50 வயதாகும் இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
 
மண் வளம் காக்கும் நெல் விளைச்சலைப் பெருக்கி, இயற்கை வேளாண்மை வாயிலாக புதிய விடியலை உருவாக்கி வந்த ‘நெல்’ இரா.ஜெயராமன் அவர்கள் இன்றைய விடியலுக்கு முன்பாகவே இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி அறிந்து, அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினேன் என கூறி தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்
 
‘தங்களது உயிர்ப் பாதுகாவலனை விவசாயிகள் இழந்துவிட்டார்கள். பாரம்பர்ய நெல் வகைகளைக் கண்டறிந்து விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியவர்’ என நெல் ஜெயராமன் மறைவுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.