அருந்ததியினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகையில் 15.7% அருந்ததியினர் உள்ளனர். சமூக நிலையிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள தங்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அருந்ததியினரின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பட்டியல் இன பிரிவினருக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றில் இந்த உள்ஒதுக்கீடு மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்பட்டது.
இந்த உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சரவணகுமார் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “பட்டியலின இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தனர்.
பட்டியல் இனத்துக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3% உள்ஒதுக்கீடு செல்லும் எனக் கூறி, பட்டியலின பிரிவினர் இடையே உள் ஒதுக்கீடு வழங்கும் வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது” எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “திமுக.வின் சமூக நீதிக் கொள்கைக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட முடிவுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்பதால், இத்தீர்ப்பை இதயபூர்வமாக வரவேற்று இறும்பூது எய்துகிறேன்” எனத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
SC -18%, ST – தனியாக 1% என பட்டியலின-பழங்குடியினர் இடஒதுக்கீட்டை 19% ஆக உயர்த்தியது தி.மு.க;
அருந்ததியினர் சமூகத்திற்கு 3% உள் இடஒதுக்கீடு தந்ததும் கலைஞர் அரசு.
இன்று உச்சநீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. கலைஞரின் முடிவுக்கான வெற்றி இது.
அக மகிழ்வோடு வரவேற்கிறேன்! pic.twitter.com/dvvGZbYF6B
— M.K.Stalin (@mkstalin) August 27, 2020
மேலும் வாசிக்க: ஊராட்சி மன்றத் தலைவர் உயிருக்கே பாதுகாப்பு இல்லா தமிழகம்…