‘டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை’ என பிரதமர் மோடியின் உலக பொருளாதார மாநாடு உரையின் போது, டெலிப்ராம்ப்டர் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கூறியது வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நேற்று (17.1.2022) காணொளி வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பல்வேறு முக்கிய விஷயங்களையும் முன்வைத்தார். அதில், “இந்தியா கொரோனா நெருக்கடி காலத்திலும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டது. தற்போது நான் உங்களுடன் பேசும் வேளையில் நாங்கள் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளோம்.

இந்த உலகிற்கு இந்தியா நம்பிக்கையால் ஆன பூச்செண்டை கொடுத்துள்ளது. நாங்கள் மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்தங்களை சர்வதேச பொருளாதார நிபுணர்களே பாராட்டுகின்றனர்.

ஓராண்டில் 160 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கை உலகிற்கே நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்போது இன்னொரு அலையை எதிர்கொள்ளும் இவ்வேளையில் நாங்கள் விழிப்புடன், பாதுகாப்புடன் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்கிறோம்.

கொரோனா உச்சம் கண்டபோது நாங்கள் ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற கொள்கையோடு மற்ற நாடுகளுக்கு தடுப்பூசியை பிற நாடுகளுக்கு அனுப்பிவைத்தோம். இந்தியா இன்று உலகின் மருந்தகமாக இருக்கிறது. இத்தேசத்தின் மருத்துவர்கள் மக்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்.

கொரோனா நெருக்கடியில், இந்திய ஐடி துறை இடையராது செயல்பட்டது. இந்தியா உலகிற்கே மென்பொருள் தொழிலாளர்களைத் தருகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு மிளிர்ந்தது.

ஆரோக்ய சேது அப்ளிகேஷன், கோவின் தளம் ஆகியன எங்களின் பெருமித அடையாளங்கள். இந்தியாவில் முன்பெல்லாம் தொழில் தொடங்கும் அனுமதி பெறுவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த சவாலைக் குறைக்க நாங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

இந்திய இளைஞர்கள் மத்தியில் தொழில் முனையும் போக்கு அதிகரித்துள்ளது. 2014ல் ஸ்டார்ட் அப் இந்தியாவில் வெகு சிலர் தான் பதிவு செய்தனர். இன்று 60,000 பேர் உள்ளனர்.

இன்று இந்தியா உருவாக்கும் பொருளாதாரக் கொள்கைகள், அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்காக உள்ளன. இந்தியா தனது இலக்குகளை உயர்ந்ததாக நிர்ணயித்துள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டெலிப்ராம்ப்டர் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நிமிடங்கள் தயங்கி நின்று திணறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் இந்த வீடியோவை பகிர்ந்து மோடியை கிண்டலடித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “இது, நான் தான் அன்றே சொன்னேனே, பிரதமர் மோடியால் டெலிப்ராம்டர் இல்லாமல் பேசவே முடியாது என்று. டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமரின் டெலிப்ராம்ப்டர் கோளாறு ஏற்பட்டது தொடர்பான கருத்து ட்விட்டரில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.