தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, சனிக்கிழமை புயலாக மாறியது. இந்தப் புயல் திசை மாறியதால், தமிழகத்துக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு குறைந்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த வியாழக்கிழமை நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வெள்ளிக்கிழமை காலை வலுவடைந்து, அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது.
 
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை பகலில் புயலாகவும் மாறி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியக்கடலில் மையம் கொண்டிருந்தது.
 
இது சனிக்கிழமை பிற்பகல் சென்னைக்கு தென்கிழக்கே 1,125 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தற்போது வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் இந்தப் புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறவுள்ளது.
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: “பானி’ புயல் ஞாயிற்றுக்கிழமை வலுப்பெற்று தீவிரப் புயலாக மாறும் என்றும்
 
வட மேற்காக நகர்ந்து 30-ஆம் தேதி மாலை வட தமிழகம் – தெற்கு ஆந்திரம் அருகே நகரக் கூடும். தற்போதைய நிலவரப்படி கரையைக் கடப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளன. என்றும் வரும் 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி “பானி’ சென்னையை நெருங்கவும் வாய்ப்பு குறைவுதான்.
 
அதுபோல, சென்னைக்கு அருகே கரையைக் கடக்கவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்தப் புயல் கரையில் இருந்து 300 கி.மீ. முதல் 400 கி.மீ. வரை வந்து, திசை மாறி வடக்கு திசையில் செல்ல வாய்ப்பு உள்ளது.
 
இந்தப் புயலால் தமிழகத்துக்கு ஆபத்து வர வாய்ப்பு இல்லை. ஒருவேளை புயல் கரையைக் கடந்தால் சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில்தான் அது நிகழும் என்றார் அவர்.
தற்போதைய நிலவரப்படி, “பானி’ புயல் திசை மாறியுள்ளதால், தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும், பலத்த மழைக்கு வாய்ப்பு குறைவு தான். தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், சென்னையைப் பொருத்தவரை, ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்
.
ஆனாலும் புயல் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் (ஏப்.28, 29, 30) ஆகிய நாள்களிலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில், மே 1-ஆம் தேதியும் கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களால் எட்டு நாடுகள் பாதிக்கப்படுகின்றன. இந்த நாடுகள் ஒன்றிணைந்து, எட்டு பெயர்களை கொடுக்கின்றன.
 
இந்த பெயர்களில் ஒவ்வொரு பெயராக புயலுக்கு கொடுத்து வருகிறோம். அந்த வகையில், தற்போது உருவாகியுள்ள புயலுக்கு வங்கதேசம் கொடுத்த “பானி’ பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.