சென்னை தாம்பரம் அருகே தனியார் ஆம்னி பேருந்து ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்து சாம்பலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
சென்னை அடையாறில் இருந்து தேனிக்கு 7.30 மணிக்கு 32 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து தாம்பரம் – இரும்புலியூர் மேம்பாலம் சென்றது. அப்போது பேருந்தின் முன்பகுதி திடீரென்று தீப்பற்றி எரிந்தது. உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு அவசர அவசரமாக பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.
 
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்தனர். ஆனாலும் பேருந்து முற்றிலுமாக எரிந்து எலும்புக் கூடாக காட்சியளிக்கிறது.
 
பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கோயம்பேட்டில் இருந்து பேருந்து புறப்படாமல் ஏன் அடையாறில் இருந்து புறப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.