தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கக் கூடிய நடிகர் அஜித் குமார், தன்னை ‘தல’ என்று யாரும் அழைக்க வேண்டாம், பெயர் சொல்லி அழைத்தாலே போதும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
நடிகர் அஜித்குமார் தனது அபார நடிப்பாற்றலால் ரசிகர்களிடையே அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்கப்பட்டு வந்தார். 2012 ஆம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் பட்டியலில் அஜித்குமார் 61 ஆவது இடத்தை பிடித்திருந்தார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டு சற்று முன்னேறி போர்ப்ஸ் பத்திரிகையில் 51 ஆவது இடத்திற்கு வந்தார். கேட்பவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ரசிகர்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துவார்.
இவர் பல்வேறு அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புப்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியே இருந்து வருகிறார். தனது படத்திலும் அரசியல் வராமல் பார்த்துக் கொள்வார்.
ஏகோபித்த ரசிகர்களின் ஆதரவை பெற்ற அஜித், ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னை அல்டிமேட் ஸ்டார் அஜித் என ரசிகர்கள் அழைத்த போதும் அப்படி அழைக்க வேண்டாம் என அறிவித்தார். தனது படங்களிலும் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் வராமல் பார்த்து கொண்டார்.
ரசிகர் மன்றத்தை அவர் கலைத்த போதிலும் சமூகவலைதளங்களில் உள்ள ரசிகர்கள் கிளப் செய்யும் அலப்பறை வலிமை விவகாரத்தில் நன்றாக தெரிந்தது. அப்போதும் அவர் ரசிகர்களை அன்பாக கண்டித்தார். வலிமை அப்டேட் வரும் நேரத்தில் வரும் என்றார்.
‘அல்டிமேட் ஸ்டார்’ பட்டத்தை துறந்தது போல் இனி ‘தல’ என அழைக்க வேண்டாம் என அஜித் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பான அறிக்கையை அவரது மக்கள் தொடர்பாளரான (PRO) சுரேஷ் சந்திரா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பெரும் மரியாதைக்குரிய ஊடக பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன், அன்புடன் அஜித்குமார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.