கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ஒன்றிய பாஜக அரசு நடத்தி வருகிறது.
அந்தவகையில் 2022- 2023 ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று (18.7.2022) நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெற்ற இந்த தேர்வை நாடு முழுவதும் 10.72 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்தியா முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டும், மிகக் கடுமையான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் தேர்வு மையத்தினுள் நுழையும் முன்பு உயர் உணர்திறன் கொண்ட உலோக உணர்வி பயன்படுத்தி விரிவான கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதே போன்று, மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக் கொண்டு பெண் தேர்வர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
மேலும், தேர்வர்களுக்கு தேர்வு அறையிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இஸ்லாமிய மாணவியிடம் ஹிஜாப், புர்கா ஆகியவற்றை நீக்கவும், மாணவிகளிடம் தீவிர உடை கட்டுப்பாடும் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தில், மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற வலியுறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் அருகே அயூரில் உள்ள மர் தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளை பரிசோதித்த தேர்வு மைய கண்காணிப்பாளர் ‘மெட்டல் ஹூக்’ வைத்த உள்ளாடையை அகற்ற வேண்டும் என்று கட்டுப்படுத்தி உள்ளார்.
தேர்வு மையத்திற்குள் மெட்டல் எதுவும் அனுமதிக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதிப்படக்கூறியதை அடுத்து மாணவிகள் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தங்கள் உள்ளாடையை அகற்றிவிட்டு தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் ஒரு அறையில் மாணவிகளின் உள்ளாடைகளைத் தேர்வு மைய அதிகாரிகள் குவியலாக போட்டுள்ளனர். தேர்வு மைய அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள் மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவலம் குறித்து மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மர் தோமா நிர்வாகத்திடம் பெற்றோர்கள் முறையிட்ட நிலையில், இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தேர்வு நடத்தும் அதிகாரிகள் அனைவரும் நீட் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என்றும் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தந்தை ஒருவர், இந்த சம்பவம் தொடர்பாக தேர்வு மைய அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநில உயர்கல்வி அமைச்சர் பிந்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு இடங்களில் விதவிதமான பிரச்சனையை சந்தித்து வருவதால், அதிகாரிகளின் இந்த வினோதமான அத்துமீறல் நடைமுறைக்கு உரிய வழிகாட்டுதல் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் பலநூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்த பெண்கள் கடந்த ஒரு நூறாண்டாக அனுபவித்து வரும் சுதந்திரத்தை தற்போது இந்த நீட் தேர்வு சம்பவங்கள் மூலம் மீண்டும் அடிமைப்படுத்துவதாக கேரளாவில் உள்ள பெண்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.