நடிகர் விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு, தயாரிப்பாளர்கள் சங்க அலுவகத்திற்கு பூட்டு போட்டனர். இதையடுத்து, அதிகாரம் இல்லாதவர்கள் போட்ட பூட்டுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர் என்று ஆவேசமாக பேசி, பூட்டை உடைக்க முயற்சித்ததை தொடர்ந்து விஷால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விஷால் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில், விஷாலுக்கு எதிராக எஸ்.வி.சேகர், இயக்குநர் பாரதிராஜா, டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே. ரித்தீஷ், தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக முதல்வரை சந்தித்து பேசினர்.
தயாரிப்பாளர் சங்க பிரச்னை அதிகரித்ததை தொடர்ந்து, சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். விஷால் மற்றும் அவருக்கு எதிரான அணியினரை அழைத்து பேசி தீர்வு காணும் வரை அலுவலகம் திறக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 145 சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், முறையான ஆர்.டி.ஒ விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விஷால் தரப்பை சேர்ந்த உறுப்பினர் அன்புதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரியும், திரைப்படங்கள் வெளியீடு தொடர்பக அலுவலக பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அன்புதுரையின் மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள ஆவணங்களை கையாள மாடோம் என விஷால் தரப்பினர் கொடுத்த உறுதியை அடுத்து, தி.நகர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் அகற்றி விடவும், சங்க கட்டிடத்தில் அமல்படுத்தப்பட்ட பிரிவு 145-ஐ விலக்கிக் கொள்ளவும் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த பிரச்னையில் ஏன் காவல் துறையினர் தலையிட வேண்டும் என நீதிபதிகள் சென்னை காவல்துறைக்கு கேள்வி எழுப்பினர். மேலும், தேர்வு செய்யப்பட்டுள்ள அணியினரை பிடிக்கிறதோ இல்லையோ, ஆனால் அவர்கள் தான் சங்க நிர்வாகிகள். அதை சங்க உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செய்யும் பணிக்கு பாதுகாப்பு அளிப்பது தான் காவல் துறையினரின் கடமை. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் காவல்துறை நடந்து கொள்ளக் கூடாது என நீதிபதிகள் கண்டிப்பு காட்டியதாக கூறப்படுகிறது.