தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் செயல்பட்டுவந்தார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் மீது புகார் எழுந்ததையடுத்து தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என். சேகர் நியமிக்கப்பட்டாார்.
இதனால் தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தனி அலுவலரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் சங்கத்தின் செயல்பாடுகளை முறைபடுத்தும் வகையில் விரைந்து செயல்பட ஏதுவாக தனி அலுவலரின் நடவடிக்கைகளுக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசு சார்பில் 9 பேர் கொண்ட தற்காலிகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் எஸ்வி சேகர், தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஜேஎஸ்கே சதிஷ்குமார், கே.ராஜன், டி.சிவா, ராதாகிருஷ்ணன், துரைராஜ், சிவசக்தி பாண்டியன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இனி இவர்களின் கீழ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இயங்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.