டெல்லி, பிகார், ஒடிசா உள்பட மேலும் 7 மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இருக்கலாம் எனவும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் கூட்டமாகச் செடியில் அமர்ந்திருப்பதும் விவசாயப் பயிர்களிலும் காணப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பாலைவன வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு 150 கி.மீ வரை செல்ல முடியும். மேலும் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 35,000 பேர் உண்ணக்கூடிய உணவை உண்ணும் தன்மை கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களில் சுமார் 100 மாவட்டங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் வாசிக்க: காப்பான் படத்தில் பார்த்த காட்சிகள் நிஜத்திலா.. அச்சத்தில் விவசாயிகள்
வெட்டுக்கிளிகள் அச்சம் தமிழ்நாட்டிற்கு இல்லை என வரலாற்று ஆய்வுகளை மேற்கோள்காட்டி மாநில வேளாண் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, நேரலகிரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள செடிகளில் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் அமர்ந்திருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். சிலர் அதைப் போட்டோ எடுத்து தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து வேளாண்துறை இயக்குனர் டாக்டர் ஆர்.கே.கவுண்டல் கூறுகையில், வெட்டுக்கிளி நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும், எந்தவொரு அவசரகால சூழ்நிலையையும் கட்டுப்படுத்தத் தயாராக இருக்குமாறும் கூறியுள்ளார். அதேபோன்று, வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அல்லது அதன் நடவடிக்கைகள் குறித்து அறியும் விவசாயிகள் அருகில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது, பாலைவன வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ‘ஹாப்பர் பேண்ட்ஸ்’ முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக ஆர்கனோபாஸ்பேட் ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.