வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் நிதி ஒதுக்கீடு செய்யாமல் தாமதிக்கிறது என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாட்டில் 2021 ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (NDRF) கீழ் கூடுதல் மத்திய தொகுப்பு நிதி ஒதுக்க இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2021 ஆம் ஆண்டு புயல் வெள்ள பாதிப்பை எதிர்கொண்ட தமிழ்நாட்டுக்கு ரூ. 4,625 கோடியை தமிழ்நாடு அரசு கோரியிருந்தநிலையில், அது தொடர்பான அறிவிப்பு இன்றைய உள்துறையின் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் இன்று (30.12.2021) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆறு மாநிலங்களுக்கு கூடுதல் ஒன்றிய அரசின் உதவியாக தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.3,063.21 கோடி வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ‘டவ் தே’ புயலை எதிர்கொண்ட குஜராத்துக்கு ரூ.1,133.35 கோடி, ‘யாஸ்’ புயலை எதிர்கொண்ட மேற்கு வங்கத்திற்கு ரூ.586.59 கோடி, தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ளம்/ நிலச்சரிவுகளை எதிர்கொண்ட அசாமுக்கு ரூ.51.53 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.504.06 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ. 600.50 கோடி, உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ. 187.18 கோடி ஒதுக்கப்படும்.
இந்த கூடுதல் நிதி உதவியானது, ஏற்கெனவே மாநிலங்களின் வசம் உள்ள மாநில பேரிடர் நிவாரண நிதியில் (SDRF) மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதியை விட அதிகம் என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-22 நிதியாண்டில், ஒன்றிய அரசு 28 மாநிலங்களுக்கு அவற்றின் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.17,747.20 கோடியை வழங்கியுள்ளது. மேலும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஏழு மாநிலங்களுக்கு ரூ.3,543.54 கோடியை விடுவிக்கப்பட்டுள்ளது.
‘டவ் தே’ மற்றும் ‘யாஸ்’ புயலுக்குப் பிறகு, 20.05.2021 அன்று குஜராத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முன் தொகையாக ரூ. 1,000 கோடியை ஒன்றிய பாஜக அரசு விடுவித்தது. 29.05.2021 அன்று மேற்கு வங்கத்துக்கு ரூ. 300 கோடியை விடுவித்தது.
2021-22 ஆம் ஆண்டில் இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து ஒரு குறிப்பாணையைப் பெறுவதற்குக் காத்திருக்காமல், ஒன்றிய அரசு உடனடியாக 22 அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுக்களை (IMCTs) நியமித்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை சுட்டிக்காட்டியுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமது ட்விட்டர் பதிவில், “எப்ப வரும் ?
தமிழகம் என்றால் எல்லாமே தாமதமா?
அமித்ஷா தலைமையிலான குழு கூடி குஜராத், அசாம், கர்நாடகா, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்திற்கு ரூ 3060 கோடி புயல், வெள்ள நிவாரண நிதி அறிவிப்பு.
தமிழக அரசு கேட்ட ரூ 4625 கோடி எப்ப வரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.