தமிழ் திரை உலகத்திற்கு மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகத்திற்கும் மிகப் பெரிய சவாலாக தமிழ் ராக்கர்ஸ் உருவெடுத்துள்ளது.
தமிழில் ‘நோட்டா’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள “டாக்சிவாலா” தெலுங்கு படம் வரும் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் ஹெச்.டி. பிரிண்ட்டை தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே ஆன்லைனில் கசிந்தது படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியான டாக்சிவாலா படத்தை அந்த தளத்தில் இருந்து நீக்க படக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து விஜய் தேவரகொண்டா கூறுகையில், “இந்த படத்தில் பலரின் உழைப்பு அடங்கியுள்ளது. அதனால் தயவு செய்து திரையரங்குகளுக்கு சென்று படம் பாருங்கள். ஆன்லைனில் கசிந்த படத்தை யாரும் பார்க்க வேண்டாம்” என்று விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்களை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் சர்கார். அரசியல் பின்னணியை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
சர்கார் படம் வெளியாகும் போது சர்கார் படம் ஹெச்.டி பிரிண்டில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கு, தயாரிப்பாளர் சங்கமும், தமிழ் ராக்கர்ஸின் சவால் முறியடிக்கப்படும் கூறி அறிக்கை ஒன்று வெளியிட்டது.
ஆனால், அதனையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி சில மணி நேரத்தில் படத்தை இணைய தளத்தில் வெளியிட்டு, திரைத் துறையினருக்கு பெரும் பிரச்சனையாக விளங்கி வருகின்றது தமிழ் ராக்கர்ஸ்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இயக்கிவருவது யார் என தெரியாமல் திரைத் துறையினர் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளர்களை கண்டுபிடிப்பது சிரமம் என்று சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
‘தமிழ் ராக்கர்ஸ்’ நிறுவனம் எங்கிருந்து செயல்படுகிறது, இதன் அட்மின் யார், அதற்கு எப்படி பணம் கிடைக்கிறது, அவர்களை ஏன் தடுக்க முடியவில்லை என்பது போன்ற கேள்விகள் அனைவருக்கும் இயல்பாகவே எழுவதுண்டு.
செல்போனில்கூட திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் தொழில்நுட்பம் வந்த பிறகுதான் தமிழ் ராக்கர்ஸ் அசுர வளர்ச்சி அடைந்தது. தமிழ் ராக்கர்சில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால், பதிவிறக்கம் செய்யும்போது அதனுடன் ஒரு பாப்அப் விளம்பரமும் பதிவிறக்கம் செய்யப்படும்.
அந்த விளம்பரம் மூலம்தான் அவர்கள் மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இந்த விளம்பரம் கம்பெனியை தொடர்பு கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினர்தமிழ் ராக்கர்ஸ் குறித்து கேட்டுள்ளனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.