குட்கா வழக்கில் தமிழக டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் நேற்று காலை பணிக்கு செல்ல காவலர் சீருடையில் தயாராக இருந்தார். அப்போது திடீரென டிஜிபி வீட்டின் முன்பு 2 கார்களில் 10 சிபிஐ அதிகாரிகள் வந்து இறங்கினர். வீட்டுக்குள் செல்ல முயன்றவர்களை அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் நாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று கூறியபடி வீட்டிற்குள் நுழைந்தனர். டிஜிபி. டி.கே.ராஜேந்திரனிடம் அடையாள அட்டையை காட்டி சோதனை நடத்த வந்ததாக தெரிவித்தனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத டிஜிபி அதிர்ச்சியடைந்தார். உடனே அவரிடம் இருந்து செல்போனை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் ெசய்தனர். அவரது வீட்டில் உள்ள தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டது. வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியில் இருந்து வீட்டிற்குள் வர யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த சோதனையின் போது சிபிஐ அதிகாரிகள் உத்தரவுப்படி டிஜிபி பயன்படுத்தும் அரசு காரில் ெபாருத்தப்பட்டிருந்த காவல் துறை கொடியும் அவசரமாக கழற்றி வைக்கப்பட்டது.
சென்னை நொளம்பூரில் உள்ள ஜார்ஜ் வீடு சொகுசாக கட்டப்பட்டுள்ளது. அதில் கீழ் தளத்தின் சில பகுதிகளை வாடகைக்கு விட்டுள்ளார். கீழ் தளத்தின் ஒரு பகுதி மற்றும் முதல் தளம், 2வது தளத்தில் அவர் சொகுசு அறைகளை கட்டி வசித்து வந்தார். அவர் சென்னை மட்டுமல்லாது திருவனந்தபுரத்திலும் வசித்து வந்தார். அமெரிக்காவில் உள்ள தனது மகன் வீட்டிலும் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியதால் அவர் இந்தியா திரும்பினார். திருவனந்தபுரத்தில் தங்கியிருந்தார். நேற்று மாலையில் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார்.
அதற்குள் சிபிஐ ரெய்டில் சிக்கிவிட்டார். சென்னையில் உள்ள வீட்டில் மட்டும் 32 சொகுசு அறைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அறையிலும் நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக சொகுசு படுக்கைகள் உள்ளன. சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது வீட்டைப் பார்த்து அசந்து விட்டனர். ஒரு நாளைக்கு ஒரு அறையில் மட்டுமே தங்குவாராம். இதனால் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு அறையில் தங்கினாலும் மீதம் 1 அல்லது 2 அறைஇருக்குமாம். இவ்வாறு சொகுசாக, தனது பெயருக்கு ஏற்றார் போல ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தாராம்.
தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றபோது அவர் அலுவலகத்துக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். சிபிஐ அதிகாரிகள் சோதனைக்கு வந்ததும் அதிர்ந்து விட்டார். தமிழக டிஜிபியாக உள்ளவர், உளவுத்துறையை கையில் வைத்திருப்பவருக்கு சிபிஐ அதிகாரிகள் மொத்தமாக சென்னை வந்த தகவல் கூட தெரியாமல் இருந்தது. வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. தான் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். முக்கியமான 5 மீட்டிங் உள்ளது.
அதனால் அலுவலகம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகளிடம் டிஜிபி கேட்டுக் கொண்டார். ஆனால், அவர்கள், ‘டிஜிபி சார் ரிலாக்சாக வீட்டில் இருங்கள். ஏன் பதட்டப்படுகிறீர்கள். இன்று ஒரு நாள் ஓய்வெடுங்கள். உங்களுக்கு அடுத்த நிலையில் நிறைய திறமையான அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்‘ என்று கூறிவிட்டனர். இதனால், காலை முதல் இரவு வரை வீட்டுக்காவலில் இருப்பது போல் எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினார்.
இந்த நிலையில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டின் எதிர் கட்சி தலைவர் கோரிக்கை வைத்து உள்ளார் ..