ஓரினச்சேர்க்கையை குற்றமாக வரையறுக்கும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

அதில் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்றும், அதற்கு எதிரான சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்படாததால், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. அதற்கேற்ப இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவை ஓரினச்சேர்க்கை என்பது குற்றச் செயல் என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலின் தன்மையைப் பொருத்து அதற்கேற்ப 10 ஆண்டுகள் வரையோ அல்லது ஆயுள் சிறையோ கூட விதிக்க அந்த சட்டப் பிரிவு வழிவகுக்கிறது.

இந்நிலையில், அந்த விதியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முக்கியமாக சுய விருப்பத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மறுபுறம் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றின் மீதான இறுதிகட்ட விசாரணை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், ஆர்.எஃப்.நாரிமன், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்பு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, ஓரினச்சேர்க்கைக்கு எதிராக மனுதாக்கல் செய்திருந்தவரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் 377-ஆவது சட்டப் பிரிவை நீக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்தார். ஒரு சட்டத்தை திருத்த வேண்டுமா? அல்லது நீக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டியது நாடாளுமன்றம் மற்றும் பேரவைகளின் வேலை என்று அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவேளை அத்தகைய சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்குமானால், அதை அரசாங்கமே திருத்தட்டும் என நீதிமன்றங்கள் காத்துக் கொண்டிருக்காது எனத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிற மனுதாரர்களின் வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது.

விசாரணையின்போது, நீதிமன்றத்திடமே முடிவை விட்டுவிடுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்கள் கடந்த ஜூலை 17-ம் தேதி நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பை தீபக் மிஸ்ரா வாசித்தார். அதன் விவரம் ” ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும் அவரவர் உணர்வு மறுக்கப்படுவது இறப்புக்கு சமமானது எனவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். அரசிய சாசன சமநிலை என்பது எண்ணிக்கையை கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஓரின சேர்க்கை குற்றமல்ல என்று கூறி ஓரின சேர்க்கையை தடைசெய்யும் சட்டப்பிரிவு 377 ஐ ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.