சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கனவே நேற்று முன்தினம் வழக்கு விசாரணை நடந்தபோது, நீதிமன்றம் உத்தரவிட்டும் கிண்டியில் தன்னுடைய அலுவலகத்தைப் பயன்படுத்த முடியாமல் தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.
 
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முற்றிலும் மீறுவதாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குகளை கையாளும் மாநில அரசின் போக்கு அதிருப்தி அளிப்பதாக சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
 
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமித்து 50 நாட்கள் ஆகியும் இதுவரை அலுவலகம் ஒதுக்கவில்லை என்பதற்கும் நீதிமன்றம் காட்டம் தெரிவித்துள்ளது.
 
சிலைக் கடத்தல் வழக்கு தொடரப்பட்டதில் இருந்தே அரசின் போக்கு சரியாக இல்லை என்று நீதிபதிகள் கூற, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அலுவலகம் வேண்டாம் என்று பொன். மாணிக்கவேல் தான் கூறினார் என்றும், பொன். மாணிக்கவேலுக்கு அதிகாரம் இல்லை என்றும், அரசு தரப்பில் கூறப்பட்டது.
 
ஆனால் உங்கள் அரசின் ஒருவர் ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக இருந்து கொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறாரே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், அவரை ஓய்வு பெற்றவராகக் கருத முடியாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
 
மேலும், இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியதை அடுத்து, மனுவாக அவர் தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரைணக்கு வந்தபோது, அரசு தரப்பில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை கிண்டியில் உரிய வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அலுவலகத்தை பூட்டி சாவியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளரிடம் சிறப்பு அதிகாரி ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால், ஓய்வு பெற்ற பிறகு தம்மை சந்தித்த ஆய்வாளர் சாவியை கேட்டதால், அதை ஒப்படைத்ததாக சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தெரிவித்தார். மேலும், தனக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், தாங்கள் ஒரு கார் ஷெட்-இல் தான் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
 
இதனால் கடுப்பாகிய நீதிபதிகள் சிலைக் கடத்தல் வழக்கை மாநில அரசு கையாளுவதைப் பார்த்தால் நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக பிரகடனம் செய்ய நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக அரசை எச்சரித்துள்ளது.