பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (ஏஐசிடிஇ) அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதிப்பருவத்தை தவிர மற்ற பருவத்தில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அரியர்ஸ் மாணவர்கள் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவ-மாணவிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும், இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகள் வழக்கம் போல் 3 மணி நேரம் நடைபெறும் எனவும், எழுத்து தேர்வு, ஆன்லைன் தேர்வுகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் மறுத்துள்ளது. அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களை தேர்ச்சியடைய செய்வது ஏற்புடையதல்ல எனக் கூறி,
இது தொடர்பான விவரத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 7 லட்சம் பொறியியல் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வாசிக்க: செப்.15க்கு பிறகு இறுதி செமஸ்டர் தேர்வு; மாணவர்கள் நேரில் எழுத வேண்டும்: உயர் கல்வித்துறை