கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாத நிலையில், கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர, மற்ற அனைத்து பருவ தேர்வுகள், அரியர் தேர்வுகள் எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று (செப்டம்பர் 01) வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் இறுதி பருவத் தேர்வு செப்டம்பர் 15க்கு பிறகு நடத்தப்பட உள்ளது.

இதற்கான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெயிடப்படும். மேற்படி இறுதி தேர்வை மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் B.Arch எனப்படும் கட்டிட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7ம் தேதி www.tneaonline.org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சூழலில், மத்திய அரசு நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதில் பிடிவாதம் செய்து வருகிறது. அதேபோல் தமிழக அரசும் மாணவர்களின் அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க: கொரோனாவை கட்டுப்படுத்தாமல் ஊரடங்கில் தளர்வுகள் பேரழிவுக்கு வழிவகுக்கும்: WHO எச்சரிக்கை