தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி இன்று (நவம்பர் 16) வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ இன்று வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல் விவரங்கள் அறிந்து கொள்ள: தலைமை தேர்தல் ஆணையம், தமிழ்நாடு
இந்த பட்டியலில் மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,01,12,370 பேர், பெண்கள் 3,09,25,603 பேர், மூன்றாம் பாலினத்தவர் 6,385 பேர். முதல்முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 2,08,413 பேர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 6,55,366 வாக்காளர்களைக் கொண்டு சோழிங்கநல்லூர் தொகுதி முதலிடத்திலும், 1,73,107 வாக்காளர் உள்ள கீழ்வேலூர் தொகுதி மிகக் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும் உள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும், பெயர் நீக்கம் செய்திடவும் வருகின்ற 21.11.2020 , 22.11.2020 மற்றும் 12.12.2020 , 13.12.2020 ஆகிய 4 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் , காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.
இதில் 01-01-2021 அன்று 18 வயது பூர்த்தியடையும் புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்தி செய்து தங்களை இணைத்து கொள்வதற்காகவும், பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7,
வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8, முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A மற்றும் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.