தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் 500 % அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. சிவகங்கையில் பேட்டி அளித்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் வாசுகி இதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்க மாநில அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’ என ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் வாசுகி குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுரையில் நேற்று 300 குழுக்களாக பிரிந்து வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான வாசுகி, வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தார்.
முன்னதாக அனைத்து இந்திய மாதர் சங்கம் சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதாக வன்முறைகள் குறித்து பொது விசாரணையில் அவர் கலந்துக்கொண்டார்.
அப்போது சர்வதேச அளவில் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு எந்த கவலையும் கிடையாது என்றார் அவர். மேலும் அரசியலிலும், சமூகத்திலும் உயர்ந்தநிலையில் உள்ளவர்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் வாசுகி தெரிவித்தார்.
முன்னதாக கோவையில் அவர் பேசிய போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது போல சூழல் நிலவுவதாக வாசுகி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது போல் சூழ்நிலை தற்போது உள்ளதாகவும் ஜனநாயகம், சமத்துவம், பெண்விடுதலை ஆகியவை கேள்விக்குறியாகியுள்ளன எனவும் மக்களை பாதிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பாக, சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் விவசாய நிலங்களும், விவசாயமும், விவசாயிகளும் அழிக்கப்படுகின்றனர் என்றார் .
மேலும் இதில், ஏராளமான பெண் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்த பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கருத்து கேட்கவோ, கருத்து தெரிவிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதிகளில் அறிவிக்கப்படாத 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, கோவை மக்களை பாதிக்கும் வகையில் சூயஸ் நிறுவனத்தோடு 24 மணி நேர குடிநீர் திட்டம் ரூ. 3,150 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி வசம் இதற்கான தொழில்நுட்பங்கள் கட்டமைப்புகள் இல்லை எனும்பட்சத்தில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து, அவர்களிடமிருந்து கட்டமைப்புகளையும், தொழில்நுட்பத்தையும் உருவாக்கிக் கொண்டு குடிநீர் வினியோகத்தை அரசாங்கமே மேற்கொள்ளலாம். ஆனால், 26 வருடங்களுக்கு பல கோடி ரூபாய் நிதியில் பன்னாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து இருப்பதால் பிரச்சினைகள் இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளது.
மேலும், டெல்லியில் இந்நிறுவனம் திறம்பட செயல்படவில்லை. அப்பகுதி மக்கள் கட்டணம் செலுத்தாததால் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் இதே நிலைமை மக்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள சி.ஏ.ஜி., அறிக்கையில் செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பிற்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஏரியைப் பராமரித்து வந்தது சூயஸ் நிறுவனம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், கோவை மாநகராட்சி பன்னாட்டு சூயஸ் நிறுவனத்தோடு கையெழுத்திட்டுள்ள 24 மணிநேர குடிநீர் திட்ட ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இத்திட்டம் பற்றிய முழுமையான தகவல்களும், ஒப்பந்த நகல்களும் தருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது, தகவல்களைக் கேட்பவரை வதந்தி பரப்புவதாகக் கூறி கைது செய்கிறது. இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட உள்ளது, என்றார்.
மேலும், அவர் பேசுகையில், “சி.ஏ.ஜி.,யின் அறிக்கையில் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டத்தில் உள்ள பல்வேறு விதிமீறல்கள் குறித்தும், அதற்கு அரசு துணைபோவது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. இவற்றை ஆய்வு செய்து விதிகளைப் பின்பற்றாத ஈஷா மையம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. வெளியிலிருந்து ஒரு உறுப்பினர் நியமனம் குறித்து உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ள நிலையில், சட்டப்படி நடவடிக்கை இருக்கும் என்று விசாகா கமிட்டி தலைவர் சீமா அகர்வால் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது