மதுரை மாவட்டம் புள்ளநேரி என்ற கிராமத்தில், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டம், செக்கானூரணியை அடுத்துள்ள பகுதியை சேர்ந்த வைரமுருகன்-சௌமியா தம்பதியிஞானர் தங்கள் வீட்டு வாசல் முன்னாடியே பழக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.. இந்நிலையில், சவுமியாவுக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி, 2வதாக மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அதனால், கடந்த மார்ச் 2ம் தேதி இரவு, அந்த பெண் சிசு இறந்து விட்டதாக கூறி வீட்டு அருகிலேயே குழி தோண்டி புதைத்துள்ளனர். நன்றாக இருந்த குழந்தையின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி உதவியுடன் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழுவினர் வைரமுருகன் வீட்டின் அருகில் இருந்த வேப்பமரத்திற்கு கீழே புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தினர்.
சோதனையில் பிறந்து 31 நாளே ஆன பெண் குழந்தையைக் கள்ளிப்பால் கொடுத்துப் பெற்றோரே கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வைரமுருகன், சௌமியா, மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோரை செக்காணூரணி போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
20 வருடங்களுக்கு முன்பு உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த பெண் சிசு கொலை அதிகமாக தலைதூக்கியது. தற்போது மீண்டும் இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் சம உரிமையை முன்னேறி வரும் நிலையில், நம்மை பெற்றவர்கள் யார் என்பதை அறிவதற்கு முன்பே ஒரு பெண் குழந்தை கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, “பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணி அருகே புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது.
கண்டனத்திற்குரிய இந்தச் செயலில் ஈடுபட்டோர், துணை நின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை, உசிலம்பட்டி அருகே பெண் சிசுக் கொலை எனத் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண் சிசுக்களைப் பாதுகாத்திட வேண்டும்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.