தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29 வரை ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் நேற்று முதல் அதி கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தென் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச மழை அளவு தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 306 மிமீ மழை பெய்துள்ளது. இதுவரை பெய்யாத மழை அளவு இதுவாகும்.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ விடுத்துள்ளது. வரும் 29 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழக கடற்பகுதியில் மற்றும் வட தமிழக பகுதிகளை நோக்கி வீசும் வலுவான கிழக்கு திசை காற்று காரணமாகவும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, வரும் 28 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்,

நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி 27 செ.மீ., திருச்செந்தூர் 25 செ.மீ., நாகை 19, ஸ்ரீவைகுண்டம் 18, குலசேகரப்பட்டினம் 16, வைப்பாறில் 15 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. காரைக்கால், திருவையாறு, சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், பெலந்துறையில் தலா 12 செ.மீ. மழை பெய்தது.

திருபுவனம், ஸ்ரீமுஷ்ணம், சாத்தூர், பேராவூரணி, லெப்பை குடிகாடு, பாளையங்கோட்டையில் தலா 11 செ.மீ. மழை பொழிந்தது. தொடர்ந்து திண்டுக்கல், திருவாரூர், பூதலூர், அகரம் சீகூர், வெப்பக்கோட்டை, சிவகங்கையில் 10 செ.மீ. மழை பெய்தது. தாம்பரம், மணிமுத்தாறு, நன்னிலம், காட்டுக்குப்பம், செப்பரம்பாக்கம், கடம்பூர், மணியாச்சியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.