தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் தபால் ஓட்டுகளை பதிவு செய்வதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் அலுவலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லெட்சுமிநாராயணன் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்  பின்வருமாறு 

தபால் வாக்களிக்க, படிவம் 13ல் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றொப்பம் இட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசாணை 843/11.7.1977 மற்றும் 158/6.11.2009ல் ‘பதிவு பெற்ற’ என்பதை தமிழக அரசு ஒழித்து விட்டது. அதற்கு பதிலாக குரூப் ஏ, பி,சி,டி என்று தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. அரசணை எண் 189/18.7.2007ல் குரூப் ஏ மற்றும் பி அலுவலர்கள் சான்றொப்பம் இட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசு செய்துள்ள நிர்வாக மாற்றங்களை உள்வாங்கி கொண்டு தேர்தல் ஆணையம் செயல்படுவது தான் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கும். ஆனால் மாநில அரசால், 42 ஆண்டுகளுக்கு முன்பு ஒழிக்கப்பட்ட அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் என்ற பதிவு பெயரை தேர்தல் ஆணையம் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல. 

விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் 3.4.19ல் தபால் வாக்குச்சீட்டு படிவம் 13ல் குரூப் ஏ மற்றும் பி அலுவலர்கள் அனைவரும் அத்தாட்சி கையொப்பம் இடலாமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென கோரியிருந்தோம். 

இன்றுவரை மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் எவ்வித தெளிவுரையும் வழங்காதது வருத்தமளிக்கிறது.

தேர்தல் ஆணைய நடவடிக்கையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தபால் வாக்கு பதிவு செய்வதில் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கை நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற தேர்தல் ஆணையத்தின் நோக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் செயல். எனவே தமிழகஅரசின் உத்தரவை ஏற்று, தபால் வாக்கு படிவம் 13ல் குரூப் ஏ மற்றும் பி அலுவலர்கள் அனைவரும் சான்றொப்பம் இடலாம் என்ற மாற்றத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.