ரஜினியை வைத்து இரு படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பா. இரஞ்சித், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் உமர்பாரூக் நினைவுநாள் பொதுக்கூட்டம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றி அவதூறாகப் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் விதத்திலும், இளைஞர்கள் மனதில் தீய எண்ணத்தை விதைக்கும் வகையிலும் உள்ளது.
 
எனவே, இரஞ்சித்தைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் பாலா திங்கள்கிழமை புகார் அளித்தார்.
 
இதையடுத்து இரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பேசியது), 153(ஏ), (1) (எ) (பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 
இந்நிலையில், வரலாற்றுத் தகவல் அடிப்படையிலேயே அவ்வாறு பேசியதாக இயக்குநர் பா. இரஞ்சித், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
உள்நோக்கத்துடன் நான் கருத்து தெரிவிக்கவில்லை, பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் உள்ள குறிப்புகளையே நானும் பேசினேன்.
 
என்னுடைய பேச்சு சமூகவலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தன்னுடைய மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.