பிறந்தநாள் இசை நிகழ்ச்சியில் கோபமடைந்த இளையராஜாவின் பேச்சு மற்றும் அவரது காலில் விழுந்து, பாதுகாவலர் மன்னிப்பு கேட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. .
இசைஞானி இளையராஜாவின் இசைக்கு அடிமை ஆகாதவர்கள் இல்லை என்றே கூறலாம். ஆனால் சமீப காலமாக இவரது பேச்சுகள் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகின்றன.
தான் இசையமைத்த பாடல்களுக்கு ராயல்டி விஷயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தினார். எஸ்.பி.பி உடன் ஏற்பட்ட மனக்கசப்பு, பத்திரிகையாளர்களிடம் தேவையற்ற கேள்விகளை எழுப்பியது, 96 படத்தில் தனது பாடலை பயன்படுத்திய இசையமைப்பாளரை ஆண்மை இல்லாதவர் என்று விமர்சனம் செய்தது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இளையராஜாவின் பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், சர்ச்சை ஏற்பட்டு, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, பாதுகாவலர் ஒருவர் திடீரென மேடைக்கு வந்தார். அதைப் பார்த்த இளையராஜா கோபமடைந்தார். அவரை அழைத்து இப்படி செய்யலாமா என்றார்.
அதற்கு தண்ணீர் கொண்டு வந்தேன் என்று பாதுகாவலர் பதில் அளித்துள்ளார். ஆனால் அவருடைய விளக்கத்தை ஏற்காமல் பேசிய இளையராஜாவின் கால்களில் விழுந்து, பாதுகாவலர் மன்னிப்பு கேட்டார். பின்னர் அங்கிருந்து கீழே சென்றுவிட்டார்.
மேலும், இசை நிகழ்ச்சிக்கு ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இளையராஜா இசை நிகழ்ச்சியில், நீண்ட காலம் கழித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் பாடியதால் ரசிகர்களும் ஆர்வமாக டிக்கெட் எடுத்து வந்தனர்.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடலுக்கும் இடையில் சில நிமிடங்கள் இளையராஜா பேசினார். அந்த பாடல்கள் உருவான விதம், நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி குறிப்பிட்டார். அப்போது பேசும்போது, ‘என் இசையால் தான் நீங்கள் வாழ்கிறீர்கள். உங்களுக்காக தான் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் நின்று நான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். ஆனால் உங்களில் சிலர் செய்யும் செயல்கள் எனக்கு வேதனை அளிக்கிறது.
ரூ.500, ரூ.1000 டிக்கெட் வாங்கியவர்கள் ஏன் ரூ.10,000 டிக்கெட் வாங்கியவர்களின் இருக்கைகளில் அமர்ந்திருக்கிறீர்கள். குறிப்பிட்ட தொகை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் என்னை திட்ட மாட்டார்களா? கட்டணத்திற்கான இருக்கைகளில் அமர்வது தானே சரி என இளையராஜா கோபப்பட்டு பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.