தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட தனது மக்கள் இயக்க நிர்வாகிகள், தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தடை விதிக்கக் கோரி, நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு ரசிகர்களை சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு நவம்பரில் இந்தச் செய்தி வெளியாகி சர்ச்சையான நிலையில், கட்சியைப் பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது பெயரைப் பயன்படுத்தி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கடந்த் ஏப்ரல் மாதம் வழக்குத் தொடர்ந்தார்.
நடிகர் சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சங்கங்களின் பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் எஸ்.ஜெ.ஜெகன், முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார், முத்து, விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் கே.பாரதிதாசன், இன்பண்ட் யோகராஜ்,
எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினரும், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆர்.பத்மனாபன், பொதுச் செயலாளரான தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளரான தாய் ஷோபா சேகர், உள்ளிட்ட 11 பேர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு, நீதிபதி எல்.மகேஸ்வரி முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதில் அளிக்குமாறு எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை 27 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.