கடந்த 1ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.23,320க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 2ம் தேதி ஒரு சவரன் ரூ.23,504, 3ம் தேதி ரூ.23,776, 4ம் தேதி ரூ.23,792 என்று தங்கம் விலை உயர்ந்து வந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,988க்கும், ஒரு சவரன் ரூ.23,904க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில்  நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,008க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.24,064க்கும் விற்கப்பட்டது.

இதனால் தங்கம் சவரனுக்கு ரூ.24 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.744 அளவுக்கு உயர்ந்துள்ளது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை நாளாகும். அதனால், இன்றைய தினம் நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கியதும் விலை மேலும் உயருமா என்பது தெரிய வரும். இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறிய விவரம் “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்கு காரணம் இந்தியா, ரஷ்யாவுடன் நவீன ஏவுகணைகள் வாங்குவதுதான். மேலும் எதிர்காலத்திலும் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட கூடாது என்று உயர்மட்டக்குழு அளவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்தியாவின் நடவடிக்கையால் அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார தடை விதிக்கும் பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும். அப்படி ஏற்பட்டால் தங்கம் விலை மேலும் உயருவதற்கான வாய்ப்புள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் இன்னும் தங்கம் விலை அதிகப்படியாக உயர வாய்ப்புள்ளது”.

இவ்வாறு அவர் கூறினார். தங்கம் விலை கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி ஒரு சவரன் ரூ.24,480க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு நவம்பர் 10ம் தேதி ரூ.24,184, நவம்பர் 19ம் தேதி ரூ.24,040க்கும் விற்கப்பட்டது. அதன் பிறகு இந்தாண்டு மே மாதம் 12ம் தேதி தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. அதாவது சவரன் ரூ.24,120க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 6 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை தற்போது ரூ.24,000ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.