பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செயல்பாடு குறித்து தனது அதிருப்தியைத் ட்விட்டரில் வெளிப்படுத்தி இருந்தார். இதனையடுத்து இந்த பதிவுகள் நீதித்துறை மற்றும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக் கூறி உச்சநீதிமன்றம் தானாகவே முன் வந்து அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. வழக்கு விசாரணையின் போது பிரசாந்த் பூஷன் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என அறிவித்துள்ளது பரபரப்பை உண்டாக்கியது. தமது கருத்துக்கள் நீதிமன்றத்தையோ நீதித்துறையையோ எவ்விதத்திலும் அவமதிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
பிரசாந்த் பூஷன் இது குறித்து அளித்த பிரமாணப் பத்திரத்தில், “டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கடும் வன்முறை ஏற்பட்டது. இதில் டெல்லி நகரமே பற்றி எரிந்தது. குறிப்பாக வடக்கு டெல்லியில் அதிக அளவில் வன்முறை நிகழ்வுகள் நடந்தன.
ஆனால் அப்போது உச்சநீதிமன்றம் அதில் தலையிடாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தது. இது எனக்கு வருத்தத்தை அளித்தது. எனவே எனது கருத்தை நான் கூறினேன். மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்பவர்கள் வேறு, உச்சநீதிமன்றம் என்பது வேறு.
நான் மற்றொரு ட்வீட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைக்கவசம் அணியாமல் சென்றது குறித்து பதிவிட்டிருந்தேன். இதில் ஏதும் தவறு இல்லை. ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகள் கருத்து சுதந்திரத்தோடு சேர்ந்தது. எனவே நான் எனது ட்விட்டர் பதிவுகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது” என பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் பூஷனின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கின் விசாரணை கடந்த புதன்கிழமை முடிவடைந்து, வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: நேபாளத்தின் அயோத்தியாபுரி தான் ராமர் பிறந்த இடம்; உறுதியாகச் சொல்லும் பிரதமர் ஒலி