டெல்லி வன்முறை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு திகார் சிறையிலிருந்த 3 மாணவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்திற்கு சதி செய்த குற்றச்சாட்டின் பெயரில் மாணவர் அமைப்புகளை சேர்ந்த தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து மாணவர்கள் தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால் தன்ஹா மூவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மூவருக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்குள் அவர்களை விடுதலை செய்ய காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது.
ஆனால் ஜாமீன் வழங்கி இரு தினங்களாகியும் மூவரும் விடுதலை செய்யப்படவில்லை. காவல்துறை தரப்பில் கடைசி நேரத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாணவர்களின் அடையாள சான்றுகளை முழுமையாக திரட்ட முடியவில்லை. எனவே அவர்களை இப்போது விடுதலை செய்யக் கூடாது என்று கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி, இதுபோன்ற காரணங்களை ஏற்க முடியாது எனக் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து மாலை 5 மணிக்குள் தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால் தன்ஹா மூவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிணையை வழங்கிய பின் ஒரு நிமிடம் கூட சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் கருத்தையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனை தொடர்ந்து மாலையில் மூன்று மாணவர்களும் திகார் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், மாணவர்களுக்கு கொடுத்த ஜாமீனை எதிர்த்து டெல்லி காவல்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு 18-06-2021 உச்ச நீதிமன்றத்தின் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, இந்த காலகட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை பிறப்பிப்பது தேவையற்றது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. எனவே மாணவர்களை ஜாமீனில் விடுதலை செய்ததற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் போராட்டம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் ஆகிய இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை அரசு இல்லாமல் செய்து விட்டது. இதுபோன்ற மனநிலை உருவாகுமானால் ஜனநாயகத்திற்கு அது கருப்பு நாளாக அமைந்து விடும் என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.
இதனை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதி, வெறும் 100 பக்கம் கொண்ட ஒரு உத்தரவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (unlawful activities prevention act/UAPA) பற்றி டெல்லி உயர்நீதிமன்றம் அதிக அளவு கருத்து தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது.
ஒட்டுமொத்த நாடு முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டம் இதுவாகும். எனவே டெல்லி உயர் நீதிமன்றம் கூறிய இந்தக் கருத்துக்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் எந்த ஒரு மனுதாரரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பேரிடரில் CAA அமல்படுத்தும் பாஜக அரசு; குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்