டெல்லியில் முதல்வரை விட துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா 2021-க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
70 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 67 இடங்களில் வெற்றி பெற்று, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. தலைநகர் டெல்லியில் மாநில அரசுக்கு அதிக அதிகாரமா அல்லது மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா என்பதில் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவியது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும், சட்ட ஒழுங்கு காவல்துறை தவிர மற்ற விஷயங்களில் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் டெல்லி அரசுக்குத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் தற்போது டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வரை விட துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா-2021 (என்சிடி மசோதா) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில், கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் மார்ச் 24 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது கடும் விவாதம் நடந்தது. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா 2021ன்படி, அந்த யூனியன் பிரதேச நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்தவொரு நிர்வாக நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கும் முன்னா், அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் ஒப்புதலை டெல்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றபட்டது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மோசமான நாள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மசோதா சட்டமாகியுள்ளது. இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் இனி அறிக்கை வெளியிடும். டெல்லியில் துணை நிலை ஆளுநருடன் அதிகார மோதலில் ஈடுபட்டு வந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிர்வாகத்துக்கு புதிய சட்டம் கடும் பின்னடைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்த் விடுதலை