சிறுவர்கள், சிறுமிகள், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் டிக்-டாக் செயலி மீதான தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது.
 
சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம் , டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டது.
 
இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. ஆனால் டிக்-டாக் செயலியை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
 
இது தொடர்பாக அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், நாளொன்றுக்கு 5 லட்சம் டாலர் இழப்பு ஏற்படுவதாக சீனாவை சேர்ந்த பைட்டேன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
 
தடை காரணமாக 250க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்கும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் அதன் மீதான தடை நீக்கப்படும் என நேற்று தெரிவித்தது.
 
மேலும், இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து, கடந்த 23-ம் தேதி நேற்று மற்றும் இன்று முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.
 
அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம், டிக்-டாக் செயலி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அச்செயலிக்கான தடை தானாகவே விலகியதாக கருதலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிக்டாக் செயலியை கண்காணிக்கவும் தடை செய்யவும் மத்தியஅரசு தயங்குகிறது என்றும் சீனா பல செயலிகளை தயாரித்து புழக்கத்தில் விட்டாலும் சிலவற்றை தடை செய்தும் கண்காணித்தும் வருகின்றனர், புதிய படங்கள் இணையதளத்தில் வெளியாவதை கட்டுப்படுத்த முடியாதா? என்றும் உயர்நீதிமன்றக்கிளை நேற்று கேள்வி எழுப்பியது.
 
இந்நிலையில், தவறான நோக்கிலோ அல்லது ஆபாசமாகவோ வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் 15 நிமிடங்களில் அகற்றப்படும் என்று டிக்-டாக் நிறுவனம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உறுதியளித்தது. தடை விதிப்பால் 250 நேரடி பணியாளர்கள், 5000 மறைமுக பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளைவிட டிக்டாக்கில் அதிக பாதுகாப்பு வசதிகள் உள்ளது,
 
இந்தியாவில் இருந்து எந்தவித புகார்களும் வரவில்லை என்றும் டிக்-டாக் நிறுவனம் வாதிட்டது. மேலும் புகார்களை விசாரிக்க நோடல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் டிக்-டாக் நிறுவனம் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தது.
 
மேலும் டிக்டாக் போன்ற செயலிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பரிந்துரை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது, குழுவின் பரிந்துரை கிடைத்ததும் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்படும் என மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இதனையடுத்து, டிக் டாக் நிறுவனம் அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று, சிறுவர்கள், சிறுமிகள், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் டிக்-டாக் செயலி மீதான தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது.
 
மேலும், டிக் டாக் நிறுவனம் அளித்துள்ள உறுதிமொழியை மீறினால் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
 
இதனால் தடை நீக்கப்பட்டதையடுத்து டிக்டாக் செயலியை கூகுள் பிளே-வில் பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.