மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வந்தன.

தமிழக முதல்வராகவும், இரும்பு பெண்ணாகவும் திகழ்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி, மற்றும் ஏ.எல்.விஜய் உள்ளிட்ட இயக்குனர்கள் தனித்தனி பகுதியாக பிரித்து படமாக்குவதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில், பேப்பர்டேல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், ஜெயலலிதா குறித்து கூறிய வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பிரியதர்ஷினி கூறுகையில், “ஒரு பெண்ணாக, வரலாறு கண்ட மாபெரும் தலைவியின் வரலாற்றை இயக்குவதற்கான இந்த வாய்ப்பை கடமையாகவே உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி பிரமாண்டமாக விரைவில் சென்னையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிக்க சில முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எல்லோருமே பயந்தனர். ஆனால் நித்யா மேனன் மட்டும்தான் துணிச்சலுடன் ஒப்புக்கொண்டார். வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்” எனக் கூறினார்.