ஜிஎஸ்டியை எளிமையாக்க வேண்டும் என அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு :
 
நாடு முழுவதும் சுமார் 7 கோடி சிறு தொழில்கள் உள்ளன. ஜிஎஸ்டி எளிமையானால் இதில் ஏறக்குறைய பாதி தொழில்கள் ஜிஎஸ்டிக்குள் வந்து விடும். எனவே, வணிகர்களுக்கு எளிமையானதாக ஜிஎஸ்டி நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும்.
 
ஜிஎஸ்டி இணையதளம் முடக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் வணிகர்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
 
ஜிஎஸ்டி வரி விதிப்பை எளிமைப்படுத்த வேண்டும். இதுபோல் வியாபாரிகளையும் துன்புறுத்தக்கூடாது. அப்போதுதான். ஜிஎஸ்டி நடைமுறையின் மீது வணிகர்களுக்கு நம்பிக்கை வரும்.
 
வணிகர்களில் சுமார் 35 சதவீதம் பேர் மட்டுமே கம்ப்யூட்டர்களை பயன்படுத்துகின்றனர். இதுவும் வரி நடைமுறையை பின்பற்ற இயலாததற்கு முக்கிய காரணம்.
 
முரண்பாடான வகையில் பொருட்களை வெவ்வேறு வரி பிரிவுகளில் சேர்த்தது, சிக்கலான வரி நடைமுறை, கணக்கு தாக்கல் செய்வதில் சிக்கல், வரி ரீபண்ட் வராதது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
 
அதோடு, ஜிஎஸ்டி தொடர்பான போதுமான விழிப்புணர்வு இல்லை. இவை வணிகர்களிடையே பெரும் சவாலாக இருக்கின்றன. இவற்றுக்கு தீர்வு கண்டால் பல வணிகர்கள் தாங்களாகவே ஜிஎஸ்டி நடைமுறையில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.