ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீதான வலதுசாரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான ஏபிவிபியின் தாக்குதலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் வலதுசாரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளனர்.
அந்த நிகழ்வுக்குப் பின்னர், நேற்று மாலை 9 மணிக்கு இடதுசாரி அமைப்பினைச் சேர்ந்த 100 மலர்கள் குழுவினர் TEFLAS என்ற மாணவர் சங்கத்தின் அலுவலக அறையில் ‘ஜானே பி தோ யாரொ’ என்ற இந்தி திரைப்படத்தைத் திரையிட இருந்தனர். 100 மலர்கள் என்பது புத்தக விவாதங்கள், படங்களை திரையிடுவது போன்ற நிகழ்வுகளை நடத்தி வரும் ஒரு மாணவர் குழு.
ஆனால், ஏபிவிபி அமைப்பினரின் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அதே அறையில் இருந்ததாகவும், ஆவணப்படம் திரையிட வந்தவர்கள் ஏற்கெனவே நிகழ்ச்சி முடிந்தவர்களை அறையில் இருந்து வெளியேற கூறியதால், 100 மலர்கள் என்ற மாணவர் குழுவிற்கும், ஏபிவிபி அமைப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர் அந்த அறையில் இருந்த பெரியார் உள்ளிட்டத் தலைவர்களின் படங்களை அடித்து உடைத்ததாகவும், இதனைத் தட்டிக்கேட்ட தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர், சேதப்படுத்தப்பட்ட மாணவர் சங்க அலுவகலம், சுவற்றில் எழுதப்பட்ட வலதுசாரி அரசியல் வாசகங்கள் ஆகிய படங்களும் காணொளிப் பதிவுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்து, காயமடைந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நாசர் முகமது மொய்தீன் என்ற மாணவர் கூறுகையில், “ஏபிவிபி உறுப்பினர்கள் திரையிடலை நடக்க விடாமல் தடுத்து, 100 மலர்கள் குழுவின் மாணவர்களைத் தாக்கினர்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டு நாங்கள் அங்கே சென்றபோது, பெரியார், மார்க்ஸ், லெனின் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. பெரியார் படத்தை யார் சேதப்படுத்தியது யார் என்று நான் கேட்டபோது, தாம்தான் அதைச் செய்ததாகக் கூறி ஏபிவிபி உறுப்பினர்கள் கனமான ஒரு பொருளைக்கொண்டு என்னையும் தாக்கினர்.
மேலும் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட ஆம்புலன்சில் இருந்தபோது அதனை மறித்து ஏபிவிபி அமைப்பினர் பிரச்சனை செய்தனர்” என்றார் நாசர். நாசர் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் மூலக்கூறு மருத்துவத்தைப் பற்றிய முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.
பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும். புது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள ஏபிவிபி அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு; பல்கலை நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன்.
தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.
தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.