ஹரியானா மாநில அரசின் தனியார்துறையில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய, மாநில அரசுகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இடஒதுக்கீடு அளவுகள் வேறுபட்டவையாகவும் இருக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சென்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சிக்கல் ஏற்பட்டது.
மேலும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பல மாநிலங்களில் தனியார் நிறுவனங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் தனியார் நிறுவனங்களில் 75% உள்ளூர் மக்களை மட்டுமே வேலையில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இதனடிப்படையில் ஹரியானா மாநில அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி ஹரியானாவில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் கடந்த ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. அதிகபட்சம் ரூ.30,000 வழங்கப்படுகிற பணிகளுக்கு இச்சட்டம் பொருந்தும்.
இச்சட்டத்திற்கு எதிராக பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹரியானா அரசின் இடஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹரியானா மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, ஹரியானா மாநில அரசின் 75% வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டிற்கு தடை விதித்துள்ளதற்கு பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் போதுமான விளக்கங்களை தரவில்லை. எனவே உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை ரத்து செய்வதாகக் கூறி உத்தரவிட்டுள்ளது.