தமிழக ரேஷன் கடைகளில், பயோமெட்ரிக் எனப்படும், விரல் ரேகை பதிவு வாயிலாக, பொருட்கள் வழங்கும் திட்டத்தை செப்டம்பர் மாத இறுதிக்குள் அமல்படுத்த, தமிழக உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் பெரும்பாலான குடும்ப அட்டை தாரர்கள், அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை வாங்குவதில்லை. இதை ரேசன் கடை ஊழியர்கள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்துவிட்டு, பதிவேட்டில் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கியது போல பதிந்து முறைகேடு செய்து வருகின்றனர்.

தற்போது தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், குடும்ப அட்டை தாரர்கள் வாங்காத இலவச பொருட்களும் வாங்கியதாகவே, அவர்களின் மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. பல்வேறு நூதனை முறையில் கடை ஊழியர்கள் முறைகேடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு, பயோமெட்ரிக் கருவியை பயன்படுத்தி குடும்ப அட்டை தாரர்கள் விரல் ரேகை பதிவு செய்தவற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், பயோமெட்ரிக் திட்டம் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் நடைமுறை, முன்னதாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை மற்றும் கரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும், பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும். பயோமெட்ரிக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குடும்ப அட்டையில் உள்ள நபர்களை, தவிர மற்ற நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு சரிபார்க்கப்பட்ட பின்னரே, அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால் அரசு நடவடிக்கை எடுக்கும்; நீதிமன்றம் அல்ல