செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வரும் சூழலில் மீண்டும் எப்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.
தற்போது ஊரடங்கு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,கர்நாடக அரசு ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆகஸ்ட் மாதம் முதல் மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைப்பிடிப்பது தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, அதற்கான முடிவுகளை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் வெளியிடும் பணியில் அரசு தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க: ஏழை மக்களின் நல்லெண்ண ஐ.நா. தூதராக 13 வயது மதுரை பெண்
கொரோனா தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என சுகாதார அமைச்சகத்தின் இரு பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கணிதமுறை மாதிரி ஆய்வின் படி அவர்கள் இதைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையிலும் பள்ளி, கல்லூரிகளை செப்டம்பர் மாதத்தில் திறக்க அரசு முடிவெடுத்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.