எழும்பூரின் அடையாளமாக திகழ்ந்த 180 ஆண்டுகள் பழமையான காவல் ஆணையர் அலுவலகம், தற்போது தமிழக காவல்துறையின் பெருமையை பறைசாற்றும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
எழும்பூர் என்றவுடன் அங்கு செயல்பட்டு வந்த காவல் ஆணையர் அலுவலகமே நினைவிற்கு வரும். இந்த காவல் ஆணையர் அலுவலகம் சுமார் 180 ஆண்டுகள் பழமையானதாகும். 1842 ஆம் ஆண்டு சென்னை வேப்பேரியில் தான் காவல்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது.
பின்னர் எழும்பூர் பாந்தியன் ரோட்டில் இருந்த பங்களாவுக்கு அலுவலகம் மாற்றப்பட்டது. 36 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட அந்த பங்களா அருணகிரி முதலியார் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. 165 ரூபாய் வாடகை கொடுத்து அந்த கட்டிடத்தில் காவல் ஆணையர் அலுவலகம் செயல்படத் தொடங்கியது.
1856 ஆம் ஆண்டு காவல் சட்டம் இயற்றப்பட்ட பிறகு முதல் காவல் ஆணையராக லெப்டினட் கர்னல் போல்டர்சன் நியமிக்கப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து அந்த பங்களாவை 21,000 ரூபாய்க்கு காவல்துறை வாங்கி சொந்தமாக்கியது.
165 ஆண்டு கால வரலாற்று காவல் ஆணையர் அலுவலகம் எழும்பூரின் அடையாளமாகவே திகழ்ந்தது. பழங்கால தோற்றத்துடன் கம்பீரமாக காவல் ஆணையர் அலுவலகம் காட்சியளித்த போதிலும், இடநெருக்கடி காரணமாக அங்கிருந்து மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து சென்னை வேப்பேரி ஈ.வெ.கி.சம்பத் சாலையில் 1.73 லட்சம் சதுரடி பரப்பளவில் செயல்பட்டு வந்த பழைய போக்குவரத்து காவல் அலுவலகத்தை இடித்துவிட்டு, அங்கு 2013 ஆம் ஆண்டு ரூ.25 கோடியில் 8 மாடிகளுடன் புதிய காவல் ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
இதன்பிறகு பழைய காவல் ஆணையர் அலுவலகம் விசாரணைக்காக குற்றவாளிகளை அழைத்து சென்று வைக்கும் இடமாக மாறியது. அந்த வளாகத்தில் புதிதாக சிபிசிஐடி, சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன.
இதனையடுத்து அந்த கட்டிடத்தை ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்து காவல் அருங்காட்சியகமாக மாற்றும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தன. தற்போது அருங்காட்சியகப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-9-2021 அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகம் தமிழ்நாடு காவல்துறையின் பெருமையை பறைசாற்றும் வகையில் வரலாற்று பெட்டகமாக மாறி இருக்கிறது.
[su_image_carousel source=”media: 26622,26625,26624,26626″ crop=”none” captions=”yes” autoplay=”4″ image_size=”full”]
150 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டுகள், சிறியரக பீரங்கிகள் ஆகியவை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் வெளி மாநிலங்களில் காவல்துறையினர் பயன்படுத்திய உடைகள், பிஸ்டல், ரிவால்வர் போன்ற துப்பாக்கிகளும், ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்று காவல்துறையின் வீரத்தை பறைசாற்றுகின்றன.
காவல்துறையில் இசைக்குழு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த இசைக்குழுவில் இடம்பெற்ற பழமையான இசைக் கருவிகள், காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய கேமராக்கள், குண்டு துளைக்காத கார்கள், வாக்கி டாக்கிகள்,
கைதிகளுக்கு போடப்பட்ட பல்வேறு வகையான கைவிலங்குகள், காவல்துறையினர் பயன்படுத்திய சைக்கிள், பழமையான ரோந்து வாகனங்கள் ஆகியவையும் அருங்காட்சியகத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் இடம்பெற்றுள்ளன.
சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி தற்போது வரையில் காவல்துறையின் முழுமையான வரலாற்றை இன்றைய இளம்தலைமுறையினர் தெரிந்து கொண்டு பயன் அடையும் வகையில் இந்த அருங்காட்சியகம் உருவாகி இருக்கிறது.
1799 ஆம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட சம்பவம் முதல் 2015 ஆம் ஆண்டு சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு வரை அத்தனை சம்பவங்களும் நினைவுச் சின்னங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், 1972-ல் நடைபெற்ற எல்ஐசி கட்டிட தீவிபத்து, 1982 ஆம் ஆண்டில் சென்னை பாண்டிபஜாரில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் உள்ளிட்டவையும் பழைய சம்பவங்களின் தொகுப்புகளாக இடம்பெற்றுள்ளன.
1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, 2004ல் சந்தன மரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், அப்போது காவல் அதிகாரி விஜயகுமார், சக அதிகாரிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் ஆகியவையும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.
மேலும் மெரினா கடற்கரையில் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட 4 சக்கர ரோந்து வாகனம், உயர் காவல் அதிகாரிகள் பயன்படுத்திய பழங்கால சொகுசு வாகனம் ஆகியவை அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் பிரமாண்டமாக காட்சி அளித்தது.
1982 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்ட புகைப்படம், மவுலிவாக்கத்தில் 11 மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களும் முக்கிய நிகழ்வுகளாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கண்டறிவதற்கு காவல்துறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அந்த காலம் முதல் தற்போது வரையில் காவல்துறையினர் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
1939 ஆம் ஆண்டில் இருந்து காவலர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள், காவல்துறையால் மீட்கப்பட்ட பழங்கால வாள்கள், பழம்பெருமை வாய்ந்த சிலைகள் ஆகியவையும் அருங்காட்சியகத்தின் பெருமையாக மிளிர்கின்றன. இதன் மூலம் எழும்பூரின் புதிய அடையாளமாக காவல்துறை அருங்காட்சியகம் இனி திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.