சேலம் – சென்னை இடையே தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக 8 வழித்தடங்களை கொண்ட பசுமை வழிச்சாலை திட்டம் 270 கி.மீட்டருக்கு அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலம் கையகப்படுத்துவதற்கு நில உாிமையாளார்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பலரும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அரசின் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.
மறு உத்தரவு வரும் வரை நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த நிலையில் பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் மனுவை விசாரித்த நீதிமன்றம் சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்த கருத்துக்கேட்க தேவையில்லை எனத் தெரிவித்து 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தலாம் என நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
2013-ல் கொண்டுவரப்பட்ட நில கையகப்படுத்தல் சட்டத்தின் 105-வது பிரிவு செல்லும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் சேலம் சென்னை திட்டத்தின் பிற அம்சங்கள் குறித்த விசாரணை பிற பொது நல வழக்குகளில் தொடரும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதுவரை இதற்கு முன்பு வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடரும் என்று கூறியுள்ளது.
இந்த தீர்ப்பில் பூவுலகின் நண்பர்கள் எழுப்பிய பல அம்சங்களை சென்னை உயர்நீதிமன்றம் பரிசீலிக்க தவறிவிட்டது என்று கருதுவதாக கூறிய பூவுலகின் நண்பர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தனர்